யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அறிமுகம்: தருமை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை…

163

இந்திய தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 05) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

இந்த வருகையின்போது, தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அலகை இலங்கையில் அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கற்கைநெறிக்கான அனுசரணையை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை வழங்குகின்றது. மேலும், கற்பித்தலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பங்கேற்கின்றனர். இதன் மூலம் இலங்கையிலுள்ள மாணவர்கள் சைவ சித்தாந்தப் பட்டப்படிப்பை கற்கும் வாய்ப்பு பெறுகின்றனர்.

மேலும், தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக சிவப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சி நெறியில் ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கல்வி பயன் பெற வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும்.