மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்.!!

176

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் – 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மேலும் இரு இளைஞர்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விபத்து குறித்து ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.