முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன.

137

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தொடர்ச்சியான அழுத்தத்தையடுத்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அணைக்கட்டு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று அணைக்கட்டினைப் பார்வையிட்டுள்ளார். விவசாயிகள் எதிர்நோக்கிய நீர்ப்பாசன சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் ‘சியாப்’ நிறுவனத்தின் ஊடாக வீரசிங்கம், சித்தாறு, சிவசாமி மற்றும் ஜங்கன் அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டதாக விவசாயிகள் முறையிட்டிருந்தனர்.

இதையடுத்து (27.01.2026) நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரவிகரன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன், (26.03.2026) அன்று மாவட்ட கமநல உதவி ஆணையாளரை சந்தித்து பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தினார்.

இதன் பின்னர் சிவசாமி அணைக்கட்டு பூர்த்தியாகி, வீரசிங்கம் மற்றும் சித்தாறு அணைக்கட்டுகள் ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்றும், ஜங்கன் அணைக்கட்டு ஏப்ரல் மாதத்திற்குள் பூர்த்தியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் 1087 ஏக்கர் நிலங்களில் சுமார் 450 ஏக்கருக்கு வீரசிங்கம் அணைக்கட்டின் மூலம் நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. முன்னதாக விவசாயிகள் ஆண்டுதோறும் சுமார் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் தற்காலிக அணைக்கட்டுகளை அமைத்து, பின்னர் அவற்றை அகற்ற வேண்டிய நிலை இருந்தது.

தற்போது நிரந்தர அணைக்கட்டு அமைக்கப்பட்டதால் நீர்ப்பாசன சிக்கல்கள் தீர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததுடன், ரவிகரனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர். மேலும், பணிகளை துரிதமாக நிறைவு செய்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.