முல்லைத்தீவில் கொடூரம்: காணாமல் போன இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு!

142

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 25 ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞனை ஏற்றி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது அம்மா, புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதானத்தில் உள்ள கிணற்று கட்டில் குறித்த இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதுடன், கிணற்றுக்குள் குறித்த இளைஞருடையதாக கருதப்படும் காலணி ஒன்று காணப்பட்டது.

அதனையடுத்து குறித்த கிணற்று நீரினை வெளியேற்றி தேடுதல் மேற்கொண்டபோது குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.