மும்பை இண்டியன்ஸ் அதிரடி வெற்றி: KKR ஐ 6 விக்கெட்டுக்களால் வென்றது.!

144

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்களால் வீழ்த்தியது.

221 ஓட்டங்கள் என்ற பெரும் இலக்கை விரட்டிய மும்பை அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றிக்கான அடித்தளத்தை ரெயான் ரிக்ல்டன் மற்றும் ரோஹித் ஷர்மா இணை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 72 பந்துகளில் 148 ஓட்டங்களை சேர்த்து வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 78 ஓட்டங்கள் (6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள்) அடித்ததுடன், ரெயான் ரிக்ல்டன் 43 பந்துகளில் 81 ஓட்டங்கள் (4 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள்) குவித்தார்.

இறுதியில் ஹார்திக் பாண்டியா மற்றும் நாமன் திர் ஆகியோர் மீதமுள்ள ஓட்டங்களை பெற்றுத் தந்து வெற்றியை உறுதிப்படுத்தினர். முன்னதாக, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 220 ஓட்டங்கள் குவித்தது; அஜின்கியா ரஹானே (67), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (51), பின் அலன் (31), ரின்கு சிங் (33*) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இந்த வெற்றியுடன், 2012க்குப் பிறகு ஐபிஎல் தொடக்கப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெறும் சாதனையை பதிவு செய்துள்ளது. மேலும், அணியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்கை விரட்டிப் பிடித்த வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.

தொடரின் ஆரம்பத்திலேயே இவ்வாறு அதிரடி வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, எதிர்கால போட்டிகளிலும் வலுவான சவாலை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.