முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா.

284

வவுனியா, முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (26.03.2026) வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி M. தமிழ்ச்செல்வி அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் கௌரவமாக வரவேற்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றல் மற்றும் கொடியேற்றல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டதுடன், மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கல்வி நிர்வாகப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. R. வீரசிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. N.S. செல்வரட்ணம் உட்படப் பல கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும், கௌரவ விருந்தினர்களாக செட்டிகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. R.B.I. உபாலி ரத்ன மலலா, கிராம உத்தியோகத்தர் திரு. J.M. ரம்ஸான், திரு. M. சிவபாலன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திருமதி மோ. இராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

போட்டிகளின் முடிவில், அணிநடை (March Past) மற்றும் இல்ல அலங்கரிப்பு ஆகிய இரண்டிலும் மருதம் இல்லம் முதலாம் இடத்தினையும், முல்லை இல்லம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏனைய விளையாட்டுப் போட்டிகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மருதம் இல்லம் 2026ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த சாம்பியன் (Overall Championship) பட்டத்தைச் சுவீகரித்தது. முல்லை இல்லம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் விருந்தினர்களால் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.