மின்சாரக் கட்டணம் உயர்வு: அனைத்து தரப்பினருக்கும் தாக்கம்

162

மின்சாரக் கட்டணம் உயர்வு: அனைத்து தரப்பினருக்கும் தாக்கம்

கொழும்பு: நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரிலிருந்து அதிக அளவில் பயன்படுத்தும் மக்கள்வரை, இந்தக் கட்டண உயர்வு அனைவருக்கும் சுமையாக மாறியுள்ளது.

புதிய திருத்தப்பட்ட கட்டண அமைப்பின் படி 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 4.3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

30 முதல் 60 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 6.9 சதவீதம் உயர்வு அமுல்படுத்தப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும்.

61 முதல் 90 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கான கட்டணம் அதே 6.9 சதவீதம் உயர்வுடன், ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.

91 முதல் 180 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 7.2 சதவீதம் கட்டண உயர்வு செய்யப்பட்டு, ஒரு அலகு 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக 25 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதாரத்தின் முக்கிய துறைகளாகக் கருதப்படும் கைத்தொழில் துறைக்கு 8.7 சதவீதமும், விருந்தகங்களுக்கு 9.9 சதவீதமும், அரச நிறுவனங்களுக்கு 14.4 சதவீதமும் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மதஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகளுக்கு குறைவான மின்சாரப் பயன்பாட்டுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு 9.6 சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய மின்னுற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு, ஏற்கனவே பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.