மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளர் கைது.!!

168

ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது ஹட்டன் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி இளைஞர்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அந்த மருந்தகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த 1400 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.