மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்த கோரிக்கை: பழைய விகிதாசார முறைக்கு ஆதரவு

79

மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் விரைவாக நடத்த வேண்டும் என்றும், தேர்தலுக்குப் பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற விசேட செயற்குழுவில் வலியுறுத்தினர். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஆராயும் இந்த செயற்குழு செவ்வாய்க்கிழமை (17) முதன்முறையாக கூடினதுடன், அடுத்த கூட்டம் ஏப்ரல் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் குறித்து உறுப்பினர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் சாணக்கியன் இராசமாணிக்கம், அரசாங்கம் தேர்தலை நடத்த உறுதியாக உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி, பழைய விகிதாசார முறைமையில் தேர்தலை விரைவாக நடத்தலாம் என பரிந்துரைத்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன் இதனை ஆதரித்து, முதலில் தேர்தலை நடத்தி பின்னர் முறைமை மாற்றங்களை ஆராயலாம் எனக் கூறினார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜித்த ஹேரத் இடையே கடந்த அரசியல் சூழ்நிலைகள் குறித்து கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டன.

இந்த விவாதங்களை தொடர்ந்து, சட்ட முறைமையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை அடுத்த கூட்டத்திற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாமதங்களை தவிர்த்து தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.