மழை பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் பாடசாலைகளை மூட மாகாண அதிகாரிகளுக்கு அறிவிப்பு.!!

11

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவெடுக்க மாகாணக் கல்விச் செயலாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளின் அனர்த்த நிலைமை, வெள்ள அபாயம் மற்றும் போக்குவரத்துப் பாதைகள் தடைப்படுவதற்கான சாத்தியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு மாகாண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதியின் நிலைமைக்கு ஏற்ப மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன என்பதைக் குறிக்காது. பெற்றோரும் மாணவர்களும் தமது மாகாணம் அல்லது பாடசாலை நிர்வாகம் வெளியிடும் சமீபத்திய அறிவிப்புகளை உறுதிப்படுத்திய பின்னரே பயணத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.