மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு; 4 பேர் கைது.!!

60

மலேசியாவின் ஜோகூர் பாரு நகரின் தம்போய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், இந்தோனேசியாவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளிகளில், குறித்த பெண் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, வீட்டுப் பணிப்பெண் முதலாளியின் குழந்தையை அடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான காணொளிகளில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் அவரை தாக்கி, மிரட்டல் விடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ஜோகூர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, [சனிக்கிழமை] மாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 30 முதல் 34 வயதுக்குட்பட்ட இரண்டு தம்பதியினர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குற்றச்சாட்டுகள் இருந்தால் சட்டப்பூர்வ வழிமுறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலேசிய காவல்துறை வலியுறுத்தியுள்ளது.