மன்னார் நகரசபை தவிசாளர் வசந்தன் மீது ஊழல் விசாரணை: ரூ.5.31 கோடி நஷ்டம் வெளிச்சம்.!

97

மன்னார் நகரசபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தற்போதைய தவிசாளர் டானியல் வசந்தன் இன்று (10) வெள்ளிக்கிழமை கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சாட்சியமளித்துள்ளார். காலை 9.30 மணியளவில் முன்னிலையான அவர், பிற்பகல் 1.30 மணி வரை சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

விசாரணையின் போது, முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், குறிப்பாக 51 சைனா பஜார் கடைகள் வழங்கலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயப்பட்டது.

இதில் 49 கடைகள் கொள்வனவு நடைமுறை சட்டம் (80:46) மீறி வழங்கப்பட்டதாகவும், இதனால் நகரசபைக்கு சுமார் 5 கோடி 31 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலித்த சிஐடி, ஊழல் இடம்பெற்றதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன எனவும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலும் இம்முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக டானியல் வசந்தன் மீண்டும் ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளார்; தேவையான கூடுதல் ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்க உள்ளார்.

மக்களின் பணம் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும், இழந்த பணத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.