மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது.!

80

மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நால்வர், மேலும் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்டியாகொடை பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவத்தகம பகுதியில் வீடொன்றைச் சோதனையிட்ட போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, 6 தோட்டாக்கள் மற்றும் 13 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதே வீட்டில் இருந்த மற்றொருவரும் 14 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி மீட்டியாகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மற்றும் உதவியாளரும் கைதாகியுள்ளனர்.

அதே சமயம், மேலும் இருவர் 11 கிராம் 500 மில்லிகிராம் மற்றும் 10 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கடந்த ஆண்டு மே 3 ஆம் திகதி எரணவில பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் விசாரணைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 23, 28 மற்றும் 34 வயதுடைய மீட்டியாகொடை மற்றும் மாதம்பை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக் குழுத் தலைவரின் சகோதரருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி இருந்து மேலும் ஒரு கொலை திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த கைது நடவடிக்கை மூலம் பெரும் குற்றச்செயல் ஒன்று தடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.