மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் இலங்கை அத்தியாவசிய பொருட்கள் விலை?

152

ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆசியாவிற்கான வர்த்தகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கான காப்பீடு அதிகரித்து, பாதை மாற்றங்கள் அதிக தாமதங்களை ஏற்படுத்துவதால், அதிகரித்து வரும் கப்பல் செலவுகளின் சுமையை இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போர் அபாயம் காரணமாக Gard, Skuld, NorthStandard போன்ற காப்புறுதி நிறுவனங்கள் நேற்று முதல் போர் அபாயக் காப்புறுதியை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கப்பல் மதிப்பில் 0.2 சதவீதமாக இருந்த காப்புறுதி கட்டணம், தற்போது 1 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.

உதாரணமாக, 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு கப்பலுக்கு, ஒரு பயணத்திற்கான காப்புறுதி கட்டணம் 200,000 டொலரில் இருந்து ஒரு மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

காப்புறுதி நிறுவனங்கள் விலகிக் கொள்வதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் கப்பல்கள் மாற்றுப் பாதைகளில் பயணிக்கின்றன. இதனால் பொருட்கள் வந்து சேருவதில் அதிக தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடல்சார் காப்புறுதி இல்லாமல் வணிகக் கப்பல்கள் பயணிக்க முடியாது என்பதால், இந்த நிலைமை உலகளாவிய வர்த்தகத்தின் முக்கிய விடயமான கப்பல் துறையை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது