மத்திய கிழக்கில் இலங்கை தேயிலைக்கு அதிகரிக்கும் கேள்வி: சந்தை மீள்ச்சி அறிகுறிகள்.

181

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் மக்கள் உணவுப் பொருட்களை கையிருப்பில் சேமிக்கத் தொடங்கியதன் காரணமாக தேயிலைக்கு அதிகமான தேவை உருவாகியுள்ளதாக சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ. 1,153 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஏலத்தில் விற்பனையாகாமல் இருந்த தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மட்டுமே காணப்பட்டதாகவும், இது சந்தையின் இயல்பான நிலையை பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கப்பல் பாதைகள் மூலம் ஏற்றுமதிகள் முன்னெடுக்கப்படுவதால் சந்தை நிலை படிப்படியாக சீராகி வருகிறது. மேலும் தேயிலை விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான உரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருள் வழங்கலை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.