மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி சந்தேகம்: அகழ்வில் எச்சங்கள் எதுவும் இல்லை.

138

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் மனித புதைகுழி இருப்பதாகக் கூறப்பட்ட காணியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்த மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாமல் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த அகழ்வு நடவடிக்கைகள் 2026 மார்ச் 30ஆம் திகதி தொடங்கி, 2026 ஏப்ரல் 01ஆம் திகதி வரை நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்றன.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த இடத்தில் சுமார் 2.8 மில்லியன் ரூபாய் செலவில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டவைத்திய அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சட்ட நிபுணர்கள் பங்கேற்ற இந்த நடவடிக்கையின் போது சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்டபோதும், கடல் நீர் ஊற்றெடுத்ததால் மேலதிக அகழ்வுகள் சாத்தியமற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரமாகக் காணக்கூடிய எச்சங்களும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், சந்தேகத்துக்குரிய பகுதிகளை மேலதிகமாக ஆய்வு செய்ய ஸ்கேன் பரிசோதனைகள் சிங்கள-தமிழ் புத்தாண்டிற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கையில் மனித எச்சங்கள் முன்னதாக கண்டுபிடிக்கப்படாமல் புதைகுழி சந்தேகத்தில் அகழ்வு தொடங்கப்பட்ட முதல் நிகழ்வாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.