மட்டக்களப்பில் துயரம்: கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு.!

225

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காயமடைந்த பெண் இரண்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கணவன் முன்னதாக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 17ஆம் திகதி அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் கடுமையாக எரிகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சுமார் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஜனவரி 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்ரல் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். காயமடைந்த நிலையில் வீடு திரும்பிய பெண் பின்னர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.