போலி தங்க நகைகளை மனைவிடம் கொடுத்து மோசடி செய்தவர் கைது..!

33

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கிகளில் வைத்து மோசடி செய்த நபர் ஒருவர், 9 மாதங்களுக்கு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(04.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், போலி தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெண்ணொருவர் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர், குறித்த நகைகள் போலியானது என சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, அடகு வைத்தவர் வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்ணை கைது செய்து விசாரணை செய்த போது, குறித்த நகைகள் அவருடைய கணவர் வடிவமைத்தது என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பெண்ணின் கணவர், தப்பி ஓடி தலைமறைவாகி நிலையில், பொலிஸார் அவரை கடந்த ஒன்பது மாதங்களாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த குறித்த நபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் மதுபான கடை ஒன்றில் மது அருந்தி கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, சம்பவ தினமான நேற்று(04) மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என்றும், தங்க ஆபரணங்கள் வடிவமைப்பு செய்து வருபவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.