போதைப்பொருள் பணத்தில் வாங்கிய 360 பவுண் தங்கம்: சந்தேகநபரின் மாமியார் கைது.!!

131

2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், அதன்மூலம் ஈட்டிய பணத்தில் இரண்டு வீடுகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் 360 பவுண் தங்க ஆபரணங்களை சேர்த்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது இரண்டு வீடுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த சொத்துக்களை முடக்கும் உத்தரவும் பெறப்பட்டு தற்போது அமுலில் உள்ளது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபரின் மனைவியின் தாயார் அந்த தங்க ஆபரணங்களை பல நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததுடன் பின்னர் மன்னார் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈட்டப்பட்ட தங்கத்தை தெரிந்தே அடகு வைத்ததும் விற்றதுமாக நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி 66 வயதுடைய அந்த பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.