பொலிஸார் மீது தாக்குதல்: சோதனையின் போது வன்முறை வெடிப்பு.!

125

காலி – எல்பிட்டிய பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கஹடுவ பகுதிக்கு சோதனைக்காகச் சென்றபோது, சந்தேகநபர்கள் பொலிஸாரை தாக்க முயன்றதால், பொலிஸார் வானத்தை நோக்கிச்சுட்டுள்ளனர்.

இதன்பின்னர், இரண்டு சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதன்போது இரண்டு அதிகாரிகள் அவர்களை துரத்திச்சென்ற நிலையில், சந்தேகநபர்களில் ஒருவர், ஒரு பொலிஸ் அதிகாரியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், சந்தேக நபரின் கையில் துப்பாக்கிச்சூடு பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்குள்ளான சந்தேகநபருக்கு விலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அங்கு வந்த மற்றுமொரு குழுவினர் சந்தேகநபரை மீட்டுக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

குறித்த நபர் கொலைச் சம்பவம் ஒன்றிற்கு ஆதவளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.