புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் விசேட பாதுகாப்பு திட்டம் அமல்!

151

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர அறிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, மேலதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட திட்டம் ஏப்ரல் 1ஆம் திகதி தொடங்கி, புத்தாண்டு காலம் முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் நகரங்களுக்கு திரும்பும் வரை தொடர்ச்சியாக அமலில் இருக்கும். இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக பயணிக்கச் சூழல் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.