புத்தாண்டு காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

140

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இணையவழி பணப்பரிமாற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருட்கள் கொள்வனவு மற்றும் பணப்பரிமாற்றங்களுக்காக இணையதள பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் தரவுகளை திருடி பணத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், பொருளாதார சிக்கல்கள் மற்றும் உடனடி இலாபம் எதிர்பார்ப்பு காரணமாக பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கவர்ச்சிகரமான புத்தாண்டு சலுகைகள், பரிசுகள் தொடர்பான போலி அறிவிப்புகள், போலியான வங்கி இணையதளங்கள், செயலி புதுப்பிப்பு கோரும் செய்திகள், போலி QR குறியீடுகள், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடைபெறும் ஏமாற்றுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய மோசடிகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு வங்கி கணக்குகளில் உள்ள பணம் அபகரிக்கப்படும் அபாயம் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, இணையத்தில் பணப்பரிமாற்றங்கள் செய்யும் போது மற்றும் அறிமுகமில்லாத இணைப்புகளை அணுகும் போது மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.