பிலியந்தலையில் சட்டவிரோத பந்தயம்: 11 இளைஞர்கள் கைது, 14 வாகனங்கள் பறிமுதல்

147

பிலியந்தலை – கெஸ்பேவ மாற்று வீதியில் பணத்திற்கு ஒட்டயம் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி பந்தயங்களில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்த 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 முச்சக்கரவண்டிகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டன.

நேற்று சனிக்கிழமை (28) இரவு 7.30 மணியளவில் வாட்ஸ்அப் குழுவொன்றின் மூலம் கெஸ்பேவ மாற்று வீதிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் அங்கு கூடி சட்டவிரோத பந்தயங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராம மக்களின் உதவியுடன் பந்தய காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

பின்னர் பொலிஸார் வீதியை மறித்து நடவடிக்கை மேற்கொண்டு இளைஞர்களை கைது செய்தனர். சுற்றிவளைப்பின் போது சிலர் தமது மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோடியதாகவும், சில வாகனங்களில் இருவர் வீதம் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.