பார்வை குறைபாடு தடையல்ல: 17 வயது ஈஸ்வரி 11 மணி 15 நிமிடங்களில் பாக் நீரிணையை நீந்தி சாதனை

103

பார்வை குறைபாடு தடையல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 17 வயதுடைய மாற்றுத்திறனாளி ஈஸ்வரி, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் நீரிணை கடலை 11 மணி 15 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார்.

திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கிய அவர், பிற்பகல் 03.15 மணியளவில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தை கடந்தடைந்தார்.

பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்தாலும், ஈஸ்வரி தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்.

இந்த சாதனையை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களிடமிருந்து அனுமதி பெற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழுவுடன் தலைமன்னாருக்கு சென்றிருந்தார்.

இந்த முயற்சியின் மூலம் கடலில் அதிக தூரமும் நேரமும் தனியாக நீந்திய பார்வைத் திறன் அற்ற மாற்றுத்திறனாளி என்ற சாதனையை ஈஸ்வரி பதிவு செய்துள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அவருக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன் 20.03.2022 அன்று ஜியா ராய் மற்றும் 05.10.2025 அன்று புவி ஆற்றல் ஆகியோரும் பாக் நீரிணையை நீந்திக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.