பாடசாலை மாணவன் மீது வகுப்பறைக்குள் தாக்குதல்: மூவர் கைது!

110

அட்டன் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயால் நேற்று சனிக்கிழமை (28) அட்டன் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே மூன்று வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை மட்டத்தில் முடிக்கப்பட்டிருந்த நிலையில், தாக்குதல் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதன் பின்னர் இது மீண்டும் கவனத்திற்கு வந்தது. தாக்குதலுக்குள்ளான மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதன்போது, நீதவானின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்களான மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாடசாலைகளில் மாணவர் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.