பாக்கெட் பால் குடித்தால் புற்றுநோய் வருமா? பிளாஸ்டிக் கவரால் ஆபத்தா?

109

உடல் ஆரோக்கியத்திற்காக நாம் தினமும் உட்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பானம் தான் பால். இந்த பாலில் உடலுக்கு வேண்டிய பல இன்றியமையாத சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் கால்சியம், புரோட்டீன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளன.

இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், தசைகளின் வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இதில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன. எனவே ஆரோக்கியமாக இருக்க தினமும் பாலை குடிக்க வேண்டியது அவசியம்தற்போது மாட்டு பாலை விட, பாக்கெட் பால் அதிகம் விற்கப்பட்டு வருகிறது, குறிப்பாக நகர்புறங்களில். மேலும் இந்த பாக்கெட் பால் குறித்து பல வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதைப் பார்க்கும் போது பலரது மனதிலும் பாக்கெட் பால் நல்லதா, கெட்டதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலும், டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கெட் பால் தீங்கை விளைவிக்குமா என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பாலிதீன் கவரை ஒழித்தவர்கள், பாக்கெட் பாலை மட்டும் ஏன் ஒழிக்கவில்லை. பாக்கெட் பாலுக்கு பயன்படுத்தும் கவரும் பிளாஸ்டிக் தானே என்று பலரும் கேட்கலாம். ஆனால் பிளாஸ்டிக்கில் உணவு தர மற்றும் உணவு தரமற்ற பிளாஸ்டிக்குகள் என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பால் பாக்கெட்டில் இருப்பது LDPE (Low Density Poly Ethylene). நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் இருப்பது HDPE (High Density Poly Ethylene). PET பாட்டில்கள் எல்லாம் உணவு தர பிளாஸ்டிக்கில் வந்துவிடும்.

ஆனால் பிவிசி, பாலிகார்பனேட் போன்றவை எல்லாம் உணவு தரமற்ற பிளாஸ்டிக்குகள். இவற்றையெல்லாம் பயன்படுத்தக்கூடாது. பாலிதீன் கவரில் இருப்பது எல்லாம் அனைத்தும் கலந்தவை என்பதால் இந்த பாலிதீன் கவரைப் பயன்படுத்த அரசு தடை செய்தது.” என்று டாக்டர் கூறினார்.

மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை தவிர்ப்பது எப்படி? “பால் பாக்கெட்டில் பயன்படுத்துவது LDPE. இது மிகவும் பாதுகாப்பானது. இதில் பாலை ஊற்றினாலும் எந்த ஒரு வேதியியல் எதிர்வினைகளும் ஏற்படாது, நச்சுக்களை வெளியிடாது மற்றும் இதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென்கள் எதுவும் கிடையாது. மைக்ரோ பிளாஸ்டிக் என்று கூறுவார்களே, அது இருக்காதா என்று கேட்கலாம். வாய்ப்புள்ளது, ஆனால் அது பால் பாக்கெட்டை அப்படியே சூடுபடுத்தினால், அது உருகி மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறலாம். மேலும் சூடான பாலை பாக்கெட்டில் ஊற்றினால், அப்போது மைக்ரோ பிளாஸ்டிக் ஆவதற்கு வாய்ப்புள்ளது.

இருப்பினும் பாக்கெட் பாலில் இருப்பது பாஸ்சுரைஸ்டு பால். அதாவது வேகமாக பாலை சூடேற்றி, வேகமாக குளிர வைக்கும் செயல்முறை பயன்படுத்தி பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. இதனால் இது கெட்டுப்போக வாய்ப்பில்லை. ஒருவேளை பால் பாக்கெட்டை வெயிலில் நேரடியாக வைத்தால், அது உருக வாய்ப்புள்ளது. இந்த தவறுகளை தவிர்த்தாலே மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.” என்று டாக்டர் கூறினார்.குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாமா? கூடாதா? “ஏற்கனவே ஒரு குழுவினர் பால் நல்லதல்ல, குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்துங்கள் என்று தவறான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு பல பெற்றோர்களும் பால் கொடுப்பதை நிறுத்தி வருகிறார்கள். ஆனால் பாலில் லாக்டோஃபெர்ரின் உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்து போராடக்கூடியது. பாலுக்கு அழற்சி உள்ள குழந்தைகளுக்கு மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு மட்டும் தான் பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலை குடித்து எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு பாலை தினமும் தவறாமல் கொடுங்கள். வளரும் குழந்தைகளுக்கு பால், முட்டை, வாழைப்பழம் ஆகிய மூன்றுமே மிகவும் முக்கியமானது. எனவே இவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்காதீர்கள் என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! இதுவரை உங்களுக்கு பாக்கெட் பால் குறித்து சந்தேகம் இருந்திருந்தால், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆகவே இனி பாக்கெட் பால் குடிப்பது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்.