பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புதிய போக்குவரத்து விதிகள் – பொதுமக்கள் அவதானம்!

116

கிளிநொச்சி: பரந்தன் – கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியில் அமைந்துள்ள இலக்கம் 11/1 “இந்தியன் பாலம்” வழியாக கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு உடனடி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி அலுவலக நிறைவேற்றுப் பொறியியலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்ட இப்பாலம் பொதுப் பயன்பாட்டில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் காலமாக அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு சம்பந்தப்பட்ட தரப்புகள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடிய பின்னர், வீதி அபிவிருத்தி அதிகார சபைத் தலைவரின் அறிவுறுத்தலின்படி இக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

பேருந்துகளைத் தவிர்ந்த அனைத்து வகையான கனரக வாகனங்களும் இப்பாலம் வழியாகச் செல்ல முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்துகள், பயணிகளை இறக்கி வைத்த பின்னர் மட்டுமே பாலத்தை கடக்க அனுமதிக்கப்படும்.

ஏனைய அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலத்தின் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மேற்கண்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.