பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்!

117

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி நல்லூர் பிரதேச சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர் மயூரன் அவர்கள், அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய சட்ட வரைபு, தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மேலும் கடுமையானதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக இணங்காததாகவும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்ற வாக்குறுதியை வழங்கி மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற பெயரில் அதைவிட மோசமான சட்டத்தை முன்வைத்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறித்த சட்டமூலம் சர்வதேச மனித உரிமை அளவுகோள்களுக்கு முரணாக இருக்கலாம் என United Nations Human Rights Council விசேட அறிக்கையாளர்கள் கவலை வெளியிட்டிருப்பதையும் அவர் நினைவூட்டினார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சட்டங்களை அமுலாக்குவது அல்லது நீக்குவது போன்ற அதிகாரங்கள் இல்லையென்பது தெரிந்ததே எனத் தெரிவித்த தவிசாளர், “ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக, மக்களுக்கு இடர் விளைவிக்கும் சட்டங்களுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்புவது எமது கடமை” என்றார்.

அதேவேளை, புதிய சட்டமூலத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, புதிய சட்டத்தை கைவிட்டு பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தையே தொடர அரசாங்கம் முயற்சிக்கலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

“தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் — குறிப்பாக கடந்த காலங்களில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கருத்தில் கொண்டு — பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இந்த தீர்மானம், நல்லூர் பிரதேச சபையின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.