பண்டிகை காலத்தில் விலை உயர்வு இல்லை: எரிவாயு விநியோகம் சீராகும் என அமைச்சர் உறுதி

97

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்றும், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் நிலைமைகள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்கள் இருந்தாலும், விலைகள் அதிகரிக்கப்படாது என உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தமாட்டோம் என உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதி பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்க்கட்சிகள் தொடர்பு கொள்ளும் விடயம் அவர்களது செயற்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த நுகர்வோர் அதிகாரசபை தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளும் என்றும், விலை உயர்வைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் தடையின்றி கிடைக்காவிடில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.