நெடுந்தீவு அரசுப் படகுகள் நிறுத்தம், தனியார் சேவையில் மக்கள் அவதி.!

194

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான கடற் போக்குவரத்து சேவை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) முதல் தனியார் கையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட அரசுப் படகுகள் சேவையில் இல்லாததால் இந்த நிலை உருவாகியுள்ளது.

குமுதினி படகு திருத்தப்பணிக்காக சேவையில் இருந்து விலகியுள்ள நிலையில், வடதாரகை திருகோணமலையில் திருத்தத்தில் உள்ளது. மேலும், நெடுந்தாரகை நெடுந்தீவிலேயே திருத்தப்பணியில் இருப்பதால் அரசுப் படகுகள் முழுமையாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தற்போது கரிகணன் எனும் தனியார் படகு மட்டும் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் வழமையான காலை 11.30 மணி சேவையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில் இந்த சேவை குறைபாடு உள்ளூர் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் கடற் போக்குவரத்து சேவையை சீரமைப்பது அவசியமாகியுள்ளது.