நுவரெலியா வாவியில் அடையாளம் தெரியாத நபர் சடலம் கண்டுபிடிப்பு.!!

174

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத நபரின் சடலம் ஒன்று திங்கட்கிழமை (06.04.2026) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு சவாரியில் ஈடுபட்டவர்கள் வாவியில் சடலம் மிதப்பதை கவனித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற நுவரெலியா மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், வாவியில் இருந்து சடலம் மீட்கப்பட உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக, குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து வாவியில் எறிந்தார்களா என்ற கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மரண விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர், சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தின் உண்மை நிலை குறித்து மேலதிக தகவல்கள் விசாரணைகளின் மூலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.