நுவரெலியாவில் காட்டுப் பகுதியில் தீ பரவி விலங்குகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு.!

132

நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி, நானுஓயா கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் உள்ள நடு காட்டுப் பகுதிகளில் இன்று புதன்கிழமை (25) காலை கொழுந்து விட்டு எரிந்துவருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

சம்பவம் விசமிகள் சிலர் திட்டமிட்டு மேற்கொண்ட செயலாக இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இதனால் காட்டுப் பகுதிகளில் பராமரிப்பு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மலையக பகுதியில் இதுபோன்ற தீ விபத்துகள் அதிகமாக காணப்படுகின்றன. விசமிகள் திட்டமிட்டு ஏற்படுத்திய தீ காரணமாக காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாகி, காட்டில் உள்ள விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு சுற்றுச் சூழலும் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.