நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!!

46

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை (22) அதிகாலை யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து சென்றவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 64 வயதுடைய ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை (21) பகல் நிக்கவெரட்டிய, சியம்பலாவ பகுதியில் உழவு இயந்திரம்  ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த  42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்தோடு, கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் வவுனியா நோக்கி பயணித்த கார் ஒன்று பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக  கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பாணந்துறை, பின்வத்தை பகுதியில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

எரிபொருள் தீர்ந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டியை இரு இளைஞர்கள் தள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.

வீதியின் மறுபுறம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்ட போது, பின்னால் வந்த காரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியை தள்ளிய இளைஞரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரைணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.