நாட்டின் பல பாகங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை!

111

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (2026 பெப்ரவரி 15) காலை 05:30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவித்தல் பின்வருமாறு:

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

வட மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக நிலவக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.