நாட்டின் பல பகுதிகளில் விபத்துகள்: ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு.!

108

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்துகளில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை பகுதியில் வீதியை கடக்க முயன்ற 47 வயதுடைய பெண் ஒருவர் லொறி மோதி உயிரிழந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அத்துருகிரிய பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அலவத்துகொட – அக்குரணை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில், பின்னோக்கி நகர்ந்த லொறி பல வாகனங்களுடன் மோதியதில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை வீதியில் நெடுங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் பாரவூர்தி மோதியதில் 24 வயதுடைய இளைஞர் மற்றும் 19 வயதுடைய யுவதி ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து விபத்துகளும் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.