நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைகள் – பெருமளவு போதைப்பொருட்களுடன் பலர் கைது.!!

158


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் லொறி ஒன்றும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்ற வீதித் தடையில் நிறுத்தச் சைகை மீறி சென்ற லொறி, பின்னர் ஜயபுரம் சந்தியில் மடக்கிப் பிடிக்கப்பட்டது. சோதனையில் 35 கிலோ 370 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், 48 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையில், 34 வயதுடைய பெண் ஒருவர் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஐஸ், ஹெரோயின், ஹேஷ், போதை மாத்திரைகள் மற்றும் 8 இலட்சத்து 59 ஆயிரத்து 730 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கைத்தொலைபேசிகள், மின்னணு தராசு மற்றும் பணம் எண்ணும் இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.

அதேபோல், வெலிகடை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், 2,600 போதை மாத்திரைகளுடன் 40 மற்றும் 56 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கெப்பட்டிபொல பகுதியில் கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திய 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 245 கிராம் ஐஸ் மற்றும் 206 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களை பயன்படுத்தி போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தம்புத்தேகம நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 987 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கலந்த “மதன மோதகம்” போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய 29 மற்றும் 45 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் முன்னெடுத்து வருகின்றன.