நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி, மூவர் காயம்!

65

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15)  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நராவல, பொத்தல காசல் ஹில்வத்தை வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவ்வீதியின் மேட்டுப் பகுதியொன்றிலிருந்து பின்னோக்கி  நகர்ந்த கெப் ரக வாகனம் ஒன்று, வீதியில் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நராவல, பொத்தல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய கெப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவல – தம்பவிட்ட வீதியின் எரமினிகம்மன பகுதியில்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கோணவல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சாரதிகள் மற்றும் பின்னால் பயணித்த இருவர் என நால்வரும் ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெவனகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வாகன விபத்துக்கள் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.