நாடு முழுவதும் வறட்சி தொடர்வு: ஏப்ரல் 2 முதல் மழைக்கு வாய்ப்பு!

206

நாடு முழுவதிலும் நிலவும் வறட்சியான வானிலை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிக வெப்பநிலை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சூழலில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவும் நிலையில், மணித்தியாலத்திற்கு 20–30 கிலோமீட்டர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் காற்று வீசும் என்றும், கடல் மிதமான அலையுடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.