நாகப்பட்டினத்தில் தங்கக் கட்டிகளை விழுங்கி மறைத்து கடத்தல் முயற்சி.!!

141

யாழ்ப்பாணத்தின் காங்கேசன் துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குப் புறப்படத் தயாராக இருந்த “சிவகங்கை” பயணிகள் கப்பலில் [17.06.2026] மேற்கொள்ளப்பட்ட சுங்கச் சோதனையில், தங்கக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் பயணிக்கவிருந்த 146 பயணிகளை சோதனையிட்டபோது சிலரின் நடமாட்டத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சோதனையில், இரண்டு இந்தியப் பிரஜைகளிடமிருந்து தலா 100 கிராம் வீதம் மொத்தம் 200 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேலும் 6 பயணிகள் தங்கக் கட்டிகளை விழுங்கி மறைத்து எடுத்துச் செல்ல முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 9 இலங்கையர்கள் மற்றும் 17 இந்தியர்கள் உட்பட மேலும் 26 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர். இதனால், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எக்ஸ்ரே மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயிற்றுப் பகுதியில் தங்கம் மறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டிருக்கக்கூடிய கடத்தல் வலையமைப்பு தொடர்பாக சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.