நள்ளிரவில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட துப்பாக்கிதாரி ‘மாட்டியா’.!!

140

மலேசியாவில் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ‘கெஹெல்பத்தர பத்மே’ (Kehelbaddara Padme) என்ற பாதாள உலகக் குழுத் தலைவனின் முக்கிய துப்பாக்கிதாரியான ‘மாட்டியா’ (Matiya) என்பவர் நேற்று (25) இரவு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன எனப்படும் 42 வயதுடைய ‘மாட்டியா’ ஆவார்.

கொட்டுகொட, யாகொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கு எதிராகச் சர்வதேச காவல்துறையினரால் (Interpol) ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை (Red Notices) விடுக்கப்பட்டிருந்தது.

இவருக்கு எதிராக உள்ள பிரதான குற்றச்சாட்டு யாதெனில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் ‘பஸ்பொட்டா’ (Pas Podda) எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் உட்பட இருவரைக் சுட்டுக்கொலை செய்தமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமையாகும்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா (AirAsia) நிறுவனத்திற்குச் சொந்தமான AK-047 விமானம் மூலம் நேற்று இரவு 09.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட வாக்குமூலப் பதிவுகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் பேலியகொடவில் உள்ள கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.