தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு- முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.!

69

தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று வத்தளை, கால சந்தி பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொதியில் இருந்து 04 டி-56 ரகத் தோட்டாக்கள், 04 ரிவோல்வர் ரகத் தோட்டாக்கள், 02 பிஸ்டல் ரகத் தோட்டாக்கள் மற்றும் 11 வெவ்வேறு வகைப்பட்ட சிம் அட்டைகள் மீட்கப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் கல்நேவ, கல்தொட்ட மற்றும் எல்பிட்டிய ஆகிய நீதிமன்றங்களினால் பிடியாணை மற்றும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.