தொழிற்துறைகளுக்கு 03 மாத நிவாரணம்: ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி தெரிவிப்பு

166

மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிற்றுறைகளுக்கும் நிவாரணமளிக்கும் வகையில் 03 மாத காலத்தை வரையறுத்து நிவாரணம் வழங்க 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

உர நிவாரணம், மீனவர்களுக்கான  எரிபொருள் நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 03 மாதங்களுக்கு பின்னர் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

உலகளாவிய போர்ச்சூழலால் நாடு என்ற ரீதியில் நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு நிவாரணம் வழங்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலையில் இரண்டு கோணங்களில்  அவதானம் செலுத்த வேண்டும். எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய  துறைகளில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிபொருளுக்கான வரியை தற்காலிகமாக நீக்கினால் பொருளாதாரம் பாதிக்கப்படும். இலங்கை  பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபையின் நிதி நெருக்கடியின் விளைவுகள் இன்றும் தொடர்கிறது. எரிபொருள் வரியை குறைக்காமல் நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிவாரணம்

அடுத்த எரிபொருள் கட்டணத் திருத்தத்தின்போது ஒரு  லீற்றர் டீசலுக்கு திறைசேரி ஊடாக 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் செலுத்தப்படவுள்ளது. 03 மாதத்துக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 6,000 கோடி ரூபா ஒதுக்கப்படும்.

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்

எரிபொருள் விலையேற்றத்தால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கமைய சாதாரண எஞ்சினுடனான மீன்பிடி படகுக்கு அந்த 100 ரூபாவுக்கு மேலதிகமாக 50 ரூபா நிவாரணம் வழங்கப்படும்.

சாதாரன மீன்பிடி படகுகளுக்கு ஒரு நாளைக்கு 25 லீற்றர் என்ற அடிப்படையில் 25 நாட்களுக்கு 625 லீற்றர் டீசல் வழங்கப்படும். 50 ரூபா நிவாரண அடிப்படையில்  அவர்களின் வங்கிக் கணக்குக்கு 31,250 ரூபா வைப்பிலிடப்படும். 03 மாதங்களுக்கு இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும். அதேபோல் ஆல்கடல் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களுக்கு 150,000 ரூபா எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும்.

உர நிவாரணம்

பழைய விலைக்கு கொண்டு வரப்பட்ட 14 ஆயிரம் மெற்றிக்தொன்  உரம்  கையிருப்பில் உள்ளன.  தனியார் நிறுவனங்களிடம் உள்ள உர தொகையில் 65 சதவீதத்தை கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு வழங்க தனியார் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதேபோல் பழைய விலைக்கு இறக்குமதி செய்த உரத்தை பழைய விலைக்கே அரசுக்கு வழங்க இணக்கம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் யூரியா உர மூட்டையை 10,200 ரூபாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  25 ஆயிரமாக வழங்கப்படும் உர நிவாரணத்தை 30 ஆயிரமாகவும், 15 ஆயிரம் ரூபா உர நிவாரணத்தை 18 ஆயிரமாகவும் அதிகரிக்க  தீர்மாகிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் சிறுத்தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 4,000 ரூபா உர நிவாரணத்துடன் ஒருமுறை மாத்திரம் 5,000 ரூபா உர நிவாரணம் வழங்கப்படும்.இதற்கமைய உர நிவாரணத்துக்கு  மாத்திரம் 6,500 மில்லியல் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

 

அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவை  இந்த மாதம் மாத்திரம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 17,500 ரூபாவை 25 ஆயிரமாகவும், 1,0000 ரூபாவை 15 ஆயிரம் ரூபாவாகவும், 5,000 ரூபாவை 7,500 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக 8,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு பிரச்சினை

நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவு,   எரிபொருள் விலை உயர்வு, நிலக்கரி நெருக்கடி ஆகிய காரணிகளால் மின்கட்டணத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மசகு  எண்ணெய் கப்பல் வருகை தாமதமடைந்துள்ளது. இந்த மாத நடுப்பகுதியில்  தான் மசகு எண்ணெய் கப்பல்கள்  நாட்டுக்கு வரவுள்ளன. இதனால் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடி வேண்டிய நிலைமை ஏற்படும்.மசகு எண்ணெய் கப்பல்களை நாட்டுக்கு வரவழைப்பது நெருக்கடி நிலைமை காணப்படுகிறது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின்னுற்பத்தி பாதிக்கப்படும் போது அதனை முகாமைத்துவம் செய்வதற்கு எரிபொருள் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.இந்த செலவை எக்காரணிகளுக்காகவும் பொதுமக்களின் மின்கட்டணத்தில் இணைக்கப் போவதில்லை.  நிலக்கரி நிறுவனத்திடமிருந்தே  அந்த தொகை அறவிடப்படும். ஏனெனில் நாங்கள் கம்பனிகளின் அரசாங்கம் அல்ல. செலுத்ததாவிடின் வழக்குத் தாக்கல் செய்யப்படும்.

கடந்த பெப்ரவரி மாதம் மதிப்பீட்டுக்கமைவாகவே ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. 90 அலகுக்கும்  குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும்   மின்பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். இந்த நிவாரணம் 3 மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்காக 1500 கோடி ரூபா ஓதுக்கப்பட்டுள்ளது.

5,000 ரூபா நாணயம் அச்சிட்டு நிவாரணமளிக்க முடியாது

2022 ஆம் ஆண்டும்  இவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. அ ப்போது 5,000 ரூபா அச்சிடப்பட்டு எண்ணம்  போல்  மக்களுக்கு வழங்கப்பட்டது.இதனால் பணவீக்கம் 70  சதவீதமாகவும், வட்டி வீதம்  33 சதவீதமாகவும் உயர்வடைந்தது. மக்கள் மத்தியில் பண புலக்கம்  அதிகரிக்கப்பட்டது. ஆகவே  நெருக்கடியான நிலைமையில் நிவாரணம் வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறான  சிறந்த அணுகுமுறையையே நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.

 நிவாரணம் வழங்க  10,000 கோடி ரூபா ஒதுக்கீடு

தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க 50 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. தற்போதைய மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நெருக்கடிக்கு நிவாரணமளிக்க 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.03 மாத காலத்துக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக நாணயம் அச்சிடாமல் , கடன் பெறாமல்  இந்த 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விநியோகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 03 மாத காலத்தை வரையறுத்தே இந்த நிவாரணம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு  நாடுகளின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.