தொடர் முச்சக்கரவண்டி கொள்ளை: 3 பேர் கைது, 4 வண்டிகள் மீட்பு.!!

168

கிரிபத்கொடை, பேலியகொட, வத்தளை மற்றும் களனி பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் ஒருவர் கடந்த மார்ச் 31ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளின் மூலம் கொள்ளைச் சம்பவங்களுடன் அவரது தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (06) ஹிங்குராக்கொட பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்போது கொள்ளையிடப்பட்ட நான்கு முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்கியதும், போலி ஆவணங்களைத் தயாரித்ததும் தொடர்பாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 61 மற்றும் 75 வயதுடைய ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியாக இடம்பெற்ற முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவங்களுக்கு பின்னால் உள்ள வலையமைப்பு குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கும் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.