தையிட்டி விகாரை விவகாரம்: தை 15இல் ஜனாதிபதி நடவடிக்கை?

127

தையிட்டி விகாரை விவகாரம்: ஜனாதிபதி நடவடிக்கைக்கு தயார்– வரும் 15ஆம் திகதி முடிவு.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டி பகுதியில் பொது மக்களின்  காணியில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு கிடைக்கக்கூடும் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 15 மற்றும் 16 ஜனவரி 2026 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க, தையிட்டி விகாரம் விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்   வெளியாகியுள்ளது.

மக்களின் சொந்த காணியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விகாரைக்கு எதிராக 36 மாதங்களாக காணி உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அழுத்தம் அதிகரித்துள்ளதால்,

ஜனாதிபதி நேரடியாக வழங்கிய உத்தரவின் பேரில் காணி பிரச்சினையை பரிசீலிக்க உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. 09.01.2026 அன்று கொழும்பில் நடைபெற்ற ஜனதிபதியுடனான முக்கியக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர், யாழ் அரச அதிபர், வலிவடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுமா அல்லது பகுதியளவில் மட்டுமே விடுவிக்கப்படுமா என்பது ஜனாதிபதி வருகைக்கு பின் தெளிவாகும்.

இந்த காணி விவகாரத்தில்  ஆரம்பத்திலிருந்தே காணி உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு (PARL) இணந்து போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளநிலையில் மக்களின் காணி உரிமை பற்றிய ஆதாரங்களை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் மூலம் தென்னிலங்கைக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் பணியில் PARL முன்னணியில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.