தூங்கிக் கொண்டிருந்த தோழியின் 20 சவரன் நகை திருடிய பெண் கைது.!

210

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், ஒரே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகராஜன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (58), சம்பவம் நடந்த நாளில் வெளியில் சென்று வீடு திரும்பிய பின்னர், தன்னுடைய 20 சவரன் தங்க நகைகளை கழற்றி மேசையில் வைத்து விட்டு ஓய்வெடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், மேசையில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார். பின்னர் விழித்தெழுந்த ஜெனிட்டா, நகைகள் காணாமல் போனதை கவனித்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பணகுடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையின் போது, அதே பகுதியில் வசிக்கும் செலினா (58) என்பவரே இந்த திருட்டை மேற்கொண்டது கண்டறியப்பட்டது.

ஜெனிட்டா மற்றும் செலினா இருவரும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், சம்பவ தினத்தில் வீட்டிற்கு வந்திருந்த செலினா, ஜெனிட்டா தூங்கியதை பயன்படுத்தி நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்கும் நடவடிக்கைகளும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.