திடீரென உள்ளங்கை வியர்க்கிறதா? கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

98

திடீரென உள்ளங்கையில் வியர்ப்பது முக்கியமான சில நோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.சிலருக்கு அடிக்கடி உள்ளங்கைகள் வியர்த்து சட்டென ஈரமாகிவிடும். இதனால் கைகுலுக்குவது, எழுதுவது, மொபைல் பயன்படுத்துவது கூட அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். உடல் உஷ்ணத்தாலோ, பதற்றத்தாலோ இப்படி வியர்ப்பது இயல்புதான் என்றபோதிலும் அசாதாரண சூழ்நிலைகளில் திடீரென வியர்ப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.

அசாதாரண சூழ்நிலைகளில் அதீதமாக வியர்ப்பது, ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, உள்ளங்கைகள் மட்டுமன்றி பாதம், அக்குள், முகம் என பல பகுதிகள் வியர்க்கும். இவையன்றி வேறு முக்கியமான சில நோயின் அறிகுறிகளாகவும் இந்த வியர்வை இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.1) முதல்நிலை ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்: இந்தப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு, உள்ளங்கைகளில் அதீதமாக வியர்க்கும். முதல்நிலை என்பதால் இரவில் இந்தப் பிரச்சனை குறைவாக இருக்கும். இந்த நிலையில், எந்த மருத்துவ காரணமும் இல்லாமல் வியர்வை சுரப்பிகள் அதிகமாகச் செயல்படும். இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலோ அல்லது இளமைப் பருவத்திலோ தொடங்கி நீடித்துக் கொண்டே போகும். இது ஆபத்தானதல்ல என்றாலும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.2) பதற்றம் மற்றும் மன அழுத்தம்: உள்ளங்கைகளில் அதிக அளவு வியர்வை சுரப்பிகள் இருந்தால், அவை உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு விரைவாக ரியாக்ட் ஆகி இப்படி அதிகப்படியாக வியர்க்கத் தொடங்கும். இத்தகையவர்களுக்கு பெரும்பாலும் பொது இடங்களில் பேசும்போதும், தேர்வு எழுதும் போதும், மன அழுத்தம் நிறைந்த உரையாடல்களின் போதும் உள்ளங்கைகள் வியர்க்கும். இத்தகையவர்களுக்கு உள்ளங்கை மட்டுமன்றி பாதம், அக்குள் போன்ற பகுதிகளிலும் வியர்க்கும்.

3) தைராய்டு: ஹைப்பர்-தைரயிடிசம் எனப்படும் அதிகப்படியான தைராய்டு சுரப்பு இருக்கும்போது, வளர்சிதை மாற்றங்கள் வேகமாக நடக்கும். இதனால் வியர்வை வெளியேற்றம் அதிகரிக்கும். தைராய்டுக்கான அறிகுறிகளில் உள்ளங்கை வியர்த்தல் மட்டுமன்றி அதிகப்படியான இதயத்துடிப்பு, திடீரென எடை குறைப்பு, பதற்றம், உஷ்ணத்தை உணர முடியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

4) ரத்த சர்க்கரை அளவில் குறைவு: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படும்போது வியர்வை, நடுக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். இத்துடன் பலவீனம், குழப்பம் அல்லது பசியுடன் கைகள் வியர்த்தால், ரத்த குளுக்கோஸ் அளவைச் சரிபார்ப்பது முக்கியம்.

5) ஹார்மோன் மாற்றங்கள்: முதல் மாதவிடாய், கர்ப்பகாலம், மெனோபாஸ் போன்ற நேரங்களில் அதிகப்படியான வியர்வை காரணமாக ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளங்கையில் அதிகமாக வியர்க்கும்.6) மருந்து, மாத்திரைகள்: மன அழுத்தத்துக்கான மாத்திரைகள், நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கான மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது அதன் பக்கவிளைவாக அதிகப்படியான உள்ளங்கையில் வியர்க்கும்.

எப்போது உடனடி கவனம் தேவை? திடீரென்றோ அதிகப்படியாகவோ உள்ளங்கையில் வியர்ப்பது, கூடவே மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுவது, உடல் எடை குறைவது, காய்ச்சல் இருப்பது, இரவில் அதிகமாக வியர்ப்பது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.