தலவாக்கலையில் கார் – முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் படுகாயம்!

49

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை, பெயாவெல் பகுதியில் இன்று சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

பண்டாரவளையிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற காரும், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் பெயாவெல் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இன்று பிற்பகல் 12:15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.