தமிழ் பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கௌரவ விருது

36

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக தமிழ் பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘Member of the Order of Australia (AM)’ விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அகதியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்ற அவர், பல்வேறு சமூக மற்றும் உலகளாவிய துறைகளில் நீண்டகால சேவையாற்றியதற்காக இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

 

பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், Amnesty International ஆஸ்திரேலியப் பிரிவு மற்றும் Australian Conservation Foundation (ACF) உள்ளிட்ட அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ‘Net Balance’ அமைப்பின் நிறுவனராகவும், ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழக வணிகப் பீடத்தின் கௌரவப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தனது பணிகள், அவரது வாழ்க்கைப் பயணத்துடன் நெருக்கமாக தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும், ‘Bridging Lanka’ அமைப்பின் மூலம் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இந்த விருது, உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமூகத்தினரிடையே பெருமையையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக சேவை மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகிறது.