சோழர் சுவடுகள் சிதைவின் விளிம்பில்: அம்பாறையில் 1000 ஆண்டுகால சிவன் ஆலயம்!

159

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் எழுந்துவரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலச் சிவன் ஆலயம் தற்போது அடையாளச் சிதைவும் இயற்கை அழிவும் எதிர்கொண்டு நிற்கிறது.

அட்டாளைச்சேனையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் புராதன ஆலயம், பராமரிப்பின்றி புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவகணேசன் தலைமையிலான ஆய்வுக்குழு மேற்கொண்ட கள ஆய்வுகள், இவ்வாலயம் 11ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் நிலவிய சோழர் கால திராவிடக் கட்டிடக்கலைப் பாணியை ஒத்தது என்பதை உறுதி செய்துள்ளன.

கள ஆய்வின் போது, கர்ப்பக்கிரகம் (கருவறை), அந்தராளம், முன் மண்டபம், பலிபீடம் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றின் எச்சங்கள் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மிகச் சிறிய அளவிலான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது சோழர் கால கட்டுமான நுட்பத்திற்குச் சான்றாகக் கருதப்படுகிறது.

இலங்கை அரசின் Department of Archaeology, Sri Lanka கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி வெளியிட்ட 1884 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில், ஆலங்குளம் பகுதி “புராதன சேத்தியா (Chaithya)” எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், தெளிவான சைவக் கோயில் கட்டமைப்புகள் இருந்தபோதிலும், இதனைப் பௌத்த வழிபாட்டுத் தலமாக அடையாளப்படுத்தியிருப்பது குறித்து ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது வரலாற்றுத் திரிபாக மாறக்கூடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு அண்மையில் உள்ள குடுவில் (Kuduvil) மலையில் கண்டெடுக்கப்பட்ட 2,200 ஆண்டுகள் பழமையான பிராமிக் கல்வெட்டில் “Damila” (தமில) என்ற சொல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது இப்பகுதியில் தமிழர்களின் தொன்மையான குடியேற்றமும் சைவ மரபும் நிலவியதை உறுதிப்படுத்தும் முக்கியமான ஆதாரமாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது ஆலயம் பல்வேறு அபாயங்களை எதிர்கொள்கிறது.பெரிய ஆலமரங்களின் வேர்கள் கர்ப்பக்கிரகச் சுவர்களை பிளந்து கட்டிடத்தை பலவீனப்படுத்துகின்றன. புதையல் வேட்டைக்காரர்களால் பீடங்கள் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடப்பதால், இடிபாடுகள் விஷப்பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளன.

வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலங்குளம் சிவன் ஆலயத்தின் உண்மையான அடையாளத்தை அரச வர்த்தமானியில் திருத்தி, உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “இது ஒரு பழமையான கட்டிடம் மட்டுமல்ல; ஒரு இனத்தின் பூர்வீக வரலாற்றுச் சான்று,” என அவர்கள் வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் தாமதிக்கப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் புராதனச் சான்று முழுமையாக அழிந்து போகும் அபாயம் நிலவுகிறது.