செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சந்திரிகாவிடம் விசாரணை நடத்துமாறு ரவிகரன் வலியுறுத்தல்.

77

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட தகவல் குறித்து, முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஊடாக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மூலம் தமக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும், அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் அனுப்பப்பட்டது என்றும் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதில் மனிதப்புதைகுழி குறித்து எதனையும் கூறவேண்டாம் என்றும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

சோமரத்ன ராஜபக்சவின் இந்தத் தகவல்களின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.

செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.